திருவொற்றியூர்: எண்ணூரில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எண்ணூர் பகுதியில் தாழங்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம், காட்டுக்குப்பம், முகத்துவார குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டு காலமாக இங்குள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் கழிவு, நிலக்கரி கழிவு, கெமிக்கல் சுடுநீர் போன்றவை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலக்கப்படுவதால் மீன், இறால், நண்டு மற்றும் சிப்பி இனங்கள் அழிவதாகவும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாவதாகவும் எண்ணூர் மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வடசென்னை அனல் மின் நிலையம் முகத்துவார ஆற்றில், உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, அரசு அனுமதித்த இடத்தை தாண்டி, கட்டிடக் கழிவுகளை ஆற்றில் கொட்டப்படுவதாக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் மீனவ மக்கள் நலசங்கத்தின் சார்பாக நெட்டுக்குப்பம் தலைவர் ராஜி தலைமையில் தாழங்குப்பம் முதல் எண்ணூர் கடைவீதி வரை கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் தாழங்குப்பம் மார்க்கெட் முதல் எண்ணூர் கத்திவாக்கம் மார்க்கெட் வரை ஊர்வலமாக நடந்து வந்து சாலையில் அமர்ந்து 8 மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க கூடாது, மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்க கூடாது, தமிழ்நாடு மின்சார வாரியமே மீனவர்களுக்கு வேலை கொடு என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக, செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 600 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் தாழங்குப்பம் மார்க்கெட் முதல் எண்ணூர் மார்க்கெட் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.