Wednesday, February 28, 2024
Home » எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

by Suresh
Published: Last Updated on

சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்த இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். மீனவர்களின் படகிற்கு நிவாரணமாக ரூ.50,000, கண்ணாடி இழை படகிற்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீன்பிடி வலைக்கு ரூ.25,000, கட்டுமரத்திற்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்: “மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவன வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய், வெள்ளநீர் கழிவுகளுடன் கலந்து எண்ணூர் முகத்துவாரம் பகுதி வழியாக கடலில் கலந்தது.

இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மீனவர்கள் தொழில் செய்யக்கூடிய பகுதிகள் அனைத்தும் எண்ணெய் படலமாக மாறி அப்பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் எண்ணெய் படலத்தால் சேதமடைந்து, மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்ய முடியாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மீனவர்கள் கடலிலும், முகத்துவாரத்திலும் மின்பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சுமார் 6,700 பேருக்கு தலா 7,500/- ரூபாய் நிவாரணமாகவும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,300 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 12,500/- ரூபாயும், படகுகளை சரிசெய்ய படகு ஒன்றுக்கு 10,000/- ரூபாயும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே, எண்ணெய் கசிவினால் சுமார் 20 நாட்கள் மீன்பிடி தொழிலுக்குப் போகாமல், மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தற்போது இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே ஒவ்வொரு படகிற்கும் நிவாரணமாக 50,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு (FRP) 30,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 20,000/- ரூபாயும், மீன்பிடி வலைக்கு 25,000/- ரூபாயும் வழங்க வலியுறுத்துகிறேன்.

மேலும், 20 நாட்கள் மீன்பிடித் தொழிலுக்குப் செல்ல முடியாததால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தற்போது அறிவித்துள்ள நிவாரணத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்குமாறு வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

3 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi