திருவொற்றியூர்: எண்ணூர் மயானத்தில் மின் விளக்கு இல்லாததால் இறந்தவர் உடலை மாலை நேரத்தில் அடக்கம் செய்ய வரும் உறவினர்கள், தீப்பந்தம் மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இறுதி சடங்குகள் நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணூர், தாழங்குப்பத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இங்கு, தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் உடலை அடக்கம் செய்ய வரும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எண்ணூர் விரைவு சாலையில் இருந்து, தாழங்குப்பம் மயானம் செல்லும், 300 மீட்டர் தூர சாலையும் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில் எண்ணுார், தாழங்குப்பம், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தர்மா (31), நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். இவரின் உடலை தாழங்குப்பத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய, அன்று மாலை கொண்டு சென்றனர். அப்போது மயானத்திற்கு செல்லும் சாலை இருள் சூழ்ந்து காணப்பட்டதால், சிரமத்துடன் சடலத்தை சுமந்து சென்றனர்.
இதேபோல், எரியூட்டு தளத்தை சுற்றியும் தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், இறுதி சடங்குகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் தீப்பந்தம் மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தை வைத்து, இறுதி சடங்குகள் மேற்கொண்டனர். இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதேபோல், மாலை நேரத்தில் இந்த மயானத்தில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள வரும் பொதுமக்கள், இங்கு மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்து, மயான பாதை மற்றும் மயானத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.