Monday, March 4, 2024
Home » இன்ப வாழ்வருளும் ரகுகுலநாதர்

இன்ப வாழ்வருளும் ரகுகுலநாதர்

by Kalaivani Saravanan

இரகுநாதசமுத்திரம்

இரகுகுலநாத ஸ்ரீஇராமபிரான் வடதேசமான அயோத்தியாவில் பிறந்தாலும், அவருக்கு அதிக ஆலயங்கள் இருப்பது என்னவோ தென்னகத்தில்தான். அப்படியான ஓர் இராமர் திருத்தலம்தான் இரகுநாதசமுத்திரம்.

ஸ்ரீஇராமர் இராவணனை அழித்து, சீதையை மீட்டு, தம்பி லட்சுமணரோடு இப்பகுதியில் வரும்போது, சுகப்பிரம்ம ரிஷியை சந்திக்கின்றார். அவரிடமிருந்து வேதங்களின் உட்பொருள் அடங்கிய ஓலைச்சுவடியைப் பெற்று, அனுமனை வாசிக்கச் சொல்கின்றார்.வேதத்தின் உட்பொருளைக் கேட்டு இன்புற்ற தசரத புத்திரர் அனுமனுக்கு உபநிஷதங்களில் ஒன்றான முக்திகோபநிஷத்தை உபதேசிக்கின்றார். இந்தத் திருக்கோளத்தை நாம் இந்த இரகுநாதசமுத்திரத்தில் தரிசனம் செய்யலாம்.

இத்தலத்தின் இராமபிரான் யோகநிலையில் அமர்ந்தவண்ணம் அருள்பாளிப்பவர். இவரைப் போன்று இந்த ஆலயத்தோடு சேர்த்து, படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் ஸ்ரீயோக இராமரை தரிசிக்கலாம். இந்த மூன்று ஆலய சிற்பத்தையும் ஒரே மன்னனால், ஒரே நேரத்தில் வடிக்கப்பட்டது என்பதுதான் சிறப்பிலும் சிறப்பு. அந்த சிறப்புக்குரிய நாயகன் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன்தான். பல கற்கோவில்களை எழுப்பிய இம்மன்னனின் மகனே புகழ்பெற்ற குடைவரைக் கோயில்களை எழுப்பிய மகேந்திரவர்ம பல்லவன் ஆவான்.

நரசிம்மவர்மப் பல்லவனால் இக்கோயில் கட்டப்பெற்றது என்பதற்குச் சான்றாக பல்லவர் கட்டடக்கலை பல இடங்களில் பிரதிபலிக்கின்றது. விசித்திர சித்தன் என்று போற்றப்பட்ட நரசிம்மப் பல்லவனின் கல்வெட்டுகளும் இங்கு பல இடங்களில் காணப்படுகின்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்யும் காலத்தில் இப்பகுதியை ஆண்ட இரகுநாத நாயக்கன் என்னும் அரசன் இந்த ஊரில் மிகப்பெரிய ஏரி ஒன்றை ஏற்படுத்தினான். இந்த ஏரியினால் சுற்றியுள்ள பல கிராமங்களின் நீர் பஞ்சம் தீர்ந்தது.

இந்த ஏரி சமுத்திரம் போல் (கடல் போல்) காட்சியளித்தது. இதனால் இவ்வூருக்கு இரகுநாதசமுத்திரம் என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர் இவ்வூர் மக்கள். அதோடு, இங்கு போர்படை வீரர்கள் பலர் தங்கியுள்ளனர். ஸ்ரீஇராமரது திருக்கோயில் இங்கு இருந்ததாலும் இவ்வூருக்கு இரகுநாதசமுத்திரம் என்கிற பெயர் வந்ததாகவும் பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் நிகமாந்த வேதாந்த தேசிகர் இத்தலத்தினில் ஒரு மண்டலம் தங்கி ஸ்ரீஇராமரை சேவித்து, பக்தர்களுக்கு பல அருள் விஷயங்களைக் கூறி, ஆசி வழங்கியுள்ளார்.ஊரின் தென்மேற்கு பகுதியில் ஆலயம் அழகுடன் அமைந்துள்ளது. கிழக்குப்புற நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால்…மேற்கு நோக்கியபடி ஸ்ரீகருடாழ்வார் தரிசனம்.

முதலில் நீண்டதொரு முக மண்டபம். அதன் வடபாகத்தில் பழமையான அனுமன். பின் மகா மண்டபம். அதன் வலப்புறம் ஆழ்வார்களின் தரிசனம். இங்கேயும் ஒரு அனுமன் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் பேரருடன் நடுநாயகமாய்ஸ்ரீஇராமச்சந்திரப்பிரபு யோகாசனமிட்டு அமர்ந்தவண்ணம் தனது வலது கரத்தை சின்முத்திரையாகக் கொண்டு, ஆத்ம ஸ்தானத்தில் வைத்தபடி கருணாகரசம் பொழியும் திருமுகத்துடன் வீற்றருள….. வில்லேந்திய கோலத்தில் தம்பி லட்சுமணர் இடதுபக்கம் நின்றருள, தாய் சீதாப்பிராட்டியாரோ வலது பக்கம் அமர்ந்து திருவருள் பொழிய, தேஜோமயமாய் திகழ்கின்றனர் தசரத குடும்பத்தினர்.

எதிரே ஈசான மூலையில் ஸ்ரீஆஞ்சநேயர் சுகப்பிரம்மரிஷி தந்த ஓலைச்சுவடியை பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருக்கின்றார். இந்த வினோதமான அமைப்பினை இங்கும், படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய இம்மூன்று திருத்தலங்களில் மட்டுமே தரிசித்து பரவசம் அடைந்திட முடியும் பக்தர்கள். இதில் இந்த இரகுநாதசமுத்திரத்தில் மட்டும் ஸ்ரீ இராமபிரானுக்கு வலதுபுறம் மாறியபடி சீதா தேவியும், இடதுபுறத்தில்  லட்சுமணரும் திருக்காட்சித் தருவது சிறப்பம்சமாகும். உற்சவ மூர்த்தமாக ஸ்ரீதேவி – பூதேவி உடன் ஸ்ரீவரதராஜ பெருமாள் எழுந்தருள்கின்றார். ஸ்ரீபத்மாசனித் தாயாருக்கும் இங்கு உற்சவத் திருமேனியுள்ளது.

ஆலய வலம் வருகையில் ஸ்ரீ பத்மாசனித் தாயாரின் தனிச்சந்நதி தென்புறமுள்ளது. இங்கு கருவறையில் இரண்டு தாயார்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கில் ஸ்ரீநாகர் சிலையும், அருகே வேப்ப மரமும் உள்ளன. வடதிசையில் தென்முகமாக ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷி தனியே சந்நதி கொண்டருகின்றார். இவர் ஆஞ்சநேயரின் குருவான ஸ்ரீசூரியனது குருவாவார். பாஞ்சராதர ஆகம முறைப்படி தினமும் பூஜைகள் நடக்கின்றன. 2009 ஆம் ஆண்டு இவ்வாலய சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. வருடாவருடம் ஸ்ரீஇராமநவமியன்று இங்கு விசேஷ அபிஷேக – அலங்கார – ஆராதனைகள் நடைபெறுகின்றன.

மூன்று வாரங்கள் இங்கு ஸ்ரீஇராமரை சேவித்து, கோரிக்கைகளைச் சொல்லி, கருடனின் பாதங்களை தொட்டு வணங்கினால், திருமண வரம் மற்றும் குழந்தை வரம் கிட்டும் என்கின்றார் இவ்வாலய பட்டாச்சாரியார். ஸ்ரீஇராமருக்கு திருமஞ்சனம் செய்து, 11 சுமங்கலிகளுக்கு புடவை மற்றும் மங்களப் பொருட்களை தானம் தந்து, வேப்பமரத்தில் தொட்டில் கட்டிச்செல்ல…. ஆண் குழந்தை பெறுவது கண்கூடு. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள இவ்வூர், சேத்பட்-பெரணமல்லூர் சாலையில் சேத்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தொகுப்பு: மோ.கணேஷ்

You may also like

Leave a Comment

19 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi