பெரியகுளம்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாததால், மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் முற்றிலும் நீர்வரத்து இல்லாமல் வறண்டநிலை காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இதன் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். கடந்த 10 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தமிழகத்திலுள்ள அருவிகளில் மிகவும் உயரமானது எலிவால் அருவி. இந்த அருவியை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கண்டு ரசித்துவிட்டு செல்வர். தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப்பயணிகள் ரசிப்பதுடன் மகிழ்ச்சியுடன் செல்பி, புகைப்படம் எடுத்து விட்டு செல்கின்றனர்.