சென்னை: தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழி முக்கியத்துவம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் அதை மேன்மையான மொழியாக கருத வேண்டாம் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஆளுநரின் எண்ணித் துணிக பகுதி 18 உலக தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொன்மைமிக்க தமிழ் மொழி பல்வேறு துன்பங்களைச் சந்தித்தது.
நாட்டின் பாரம்பரிய கல்வியையும், தொழில் துறையையும் அழித்தனர். ஆங்கிலக் கல்வி அவர்களுக்கு அவசியமானதாக மாறியது. புதிய கல்வி முறை மூலம் பள்ளிகளில் தமிழை பொருட்படுத்தவே இல்லை. அந்த கல்வி முறையின் மூலம், ஆங்கிலேயர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தையே விதைத்தனர்.
இன்றும் பலர் ஆங்கிலம் சிறந்தது என்ற எண்ணத்தில் உள்ளனர். இது மாற வேண்டும். ஒவ்வொருவரும் தம் தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பிற மொழிகளை அறிதல் தவறு அல்ல, ஆனால் தாய்மொழியையே முதன்மையாக மதிக்க வேண்டும். ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் அதை மேன்மையான மொழியாக கருத வேண்டாம். இவ்வாறு கவர்னர் கூறினார்.