கோவை: ‘ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும்’ என்று அமித்ஷா பேச்சுக்கு எடப்பாடி ஆதரவு தெரிவித்து உள்ளார். மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, ‘‘அன்னிய மொழிகளால் இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனெனில், ஒருவரின் வரலாறு, கலாசாரம் மற்றும் மதத்தை அன்னிய மொழியில் புரிந்து கொள்ள முடியாது. இந்த நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும். அதுபோல ஒரு இந்திய சமூகம் உருவாவது வெகு தொலைவில் இல்லை. உறுதியுடன் இருப்பவர்களால் மாற்றத்தை கொண்டுவர முடியும்’’ என்றார். இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கீழடி அகழாய்வு குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாக விளக்கமாக பதில் அளித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியிலும், அவரது மறைவிற்கு பிறகும் கீழடி அகழாய்விற்கு என்னென்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக கூறியுள்ளார்.
ஆங்கிலம் தொடர்பாக அமித்ஷா அவரது கருத்தை சொல்லியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லலாம். தாய்மொழி என்பது முக்கியம் என அமித்ஷா சொல்லியுள்ளார். அனைவருக்கும் தாய்மொழி என்பது மிக, மிக முக்கியம். தாய்மொழிக்கு தரும் முக்கியத்துவத்தை விட, ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற பொருள்பட அவர் சொல்லியுள்ளார்.
ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபாடு செய்ய ஜனநாயகத்தில் உரிமை உள்ளது. ஜனநாயக நாட்டில் இந்து முன்னணி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு வாழ்த்துகள். யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அதனை பிரதமர் முன்னின்று நடத்தி இருப்பதற்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறினார்.