டாவ்ன்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி, 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வந்தது. ஏற்கனவே நடந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று, 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், டாவ்ன்டன் நகரில் 3வது ஒரு நாள் போட்டி நடந்தது. போட்டி துவங்கும் முன் நீண்ட நேரம் மழை பெய்து ஓய்ததால், 21 ஓவர்கள் கொண்ட போட்டியாக சுருக்கப்பட்டது. பின்னர், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனைகள், இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 6 வீராங்கனைகள் 10 ரன்களுக்குள் வீழ்ந்தனர். அதிகபட்சமாக கியானா ஜோசப் 34 ரன்களை எடுத்தார்.
21 ஓவர் முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன் மட்டுமே எடுத்தது. அதையடுத்து, 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகளில் ஒருவரான சோபியா டங்லீ 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீராங்கனையும் கேப்டனுமான, நாட் சிவர் பிரன்ட் அட்டகாசமாக ஆடி, 33 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 57 ரன் விளாசினார். ஆலீஸ் கேப்சி 11 பந்துகளில் 20 ரன் எடுத்தார். 10.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 109 ரன்களை குவித்தது. அதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து தரப்பில் அற்புதமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாரா கிளென் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.