லண்டன்: இலங்கை அணியுடனான பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதிய 4 நாள் பயிற்சி ஆட்டம் வொர்செஸ்டர் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது (ஆக.14-17). டாஸ் வென்ற லயன்ஸ் முதலில் பந்துவீசிய நிலையில், இலங்கை முதல் இன்னிங்சில் 139 ரன்னுக்கு சுருண்டது. லயன்ஸ் பந்துவீச்சில் ஸமான் அக்தர் 5, ஜோஷ் ஹல் 3, அஜீத், ஆல்ட்ரிட்ஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்சில் 324 ரன் குவித்து ஆல் அவுட்டானது (ஹம்சா ஷேக் 91, ஆல்ட்ரிட்ஜ் 78, மெக்கின்னி 46). இலங்கை தரப்பில் பிரபாத் 5, ரஜிதா 2, லாகிரு, மிலன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
185 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை, 306 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. நிஷான் மதுஷ்கா 77, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 66, ஏஞ்சலோ மேத்யூஸ் 51, சமரவிக்ரமா 25 ரன் விளாசினர் (87.1 ஓவர்). லயன்ஸ் தரப்பில் பர்ஹான் அகமது 3, ஜோஷ் ஹல், ஸமான் அக்தர், லிண்டன் ஜேம்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 122 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லயன்ஸ் 26.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. மெக்கின்னி 20, ஓலிவர் பிரைஸ் 0, ஹம்சா ஷேக் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ராப் யேட்ஸ் 57, ஜேம்ஸ் ரியூ 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை – இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் ஆக. 21ம் தேதி தொடங்குகிறது.