லண்டன்: இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் உள்ள நடன பள்ளியில் கடந்த 29ம் தேதி 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் லான்காஷியர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடையவன், அகதியாக இங்கிலாந்தில் குடியேறிவன் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவியது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய் தகவல்களும் பரவியதால் தீவிர வலதுசாரிக் குழுக்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் வார விடுமுறையான நேற்று முன்தினமும், நேற்றும் தீவிரமாக நடந்தது. லிவர்பூல், ஹல், பிரிஸ்டல், லீட்ஸ், பிளாக்பூல், ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட், பெல்ஃபாஸ்ட், நாட்டிங்ஹாம் மற்றும் மான்செஸ்டர் ஆகிய இடங்களில் கடும் வன்முறை வெடித்தன. அகதிகளாக வந்தவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. தடுக்க வந்த போலீசார் மீது செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டக்காரர்களில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து பிரமதர் கெய்ர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். இந்த போராட்டத்தால் இங்கிலாந்தில் வசிக்கும் முஸ்லிம்கள் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருப்பதாகவும், மசூதிகளுக்கு செல்ல அச்சப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.