பர்மிங்காம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா டி.20யில் முதல் சதம் விளாசினார். அவர் 62 பந்தில் 112 ரன் விளாசினார். ஹர்லீன் தியோல் 43 ரன் அடித்தார்.
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 14.3 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 97 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 66 ரன் அடித்தார். இந்திய பவுலிங்கில் சரணி 4, தீப்தி சர்மா, ராதாயாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்திய கேப்டன் மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார். அவர் கூறுகையில், டி.20யில் எனது முதல் சதம் அடிக்க நீண்ட நேரமானது. இதற்கு முன் சதத்தை நெருங்கி பலமுறை அவுட் ஆகி உள்ளேன். இந்த சுற்றுப்பயணத்திற்கு முன் சதம் அடிக்க வேண்டிய நேரம் இது என பேசிக்கொண்டிருந்தேன். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஹர்லீன் பேட்டிங் செய்த விதம், ஷபாலி அவுட் ஆன பிறகு அதிரடியாக ஆடியது சிறப்பானது. பந்துவீச்சாளர்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. இன்னும் 4 போட்டிகள் உள்ளன. இதனை தொட விரும்புகிறோம்’’ என்றார். 2வது டி.20 போட்டி வரும் 1ம் தேதி நடக்கிறது.
பிட்ஸ்… பிட்ஸ்…
* இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 11 டி.20 போட்டிகளில் வென்ற நிலையில் இந்தியா அதற்கு நேற்று முட்டுக்கட்டை போட்டது.
* டெஸ்ட், ஒன்டே, டி.20 என 3 வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை மந்தனா தான்.
* சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா டெஸ்ட்டில் 2, ஒன்டேவில் 11, டி.20யில் 1 என 14 சதம் அடித்துள்ளார்
* மகளிர் டி.20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீராங்கனை மந்தனா தான். இதற்கு முன் கவுர் 103 ரன் அடித்திருந்தார்.