பிரிஸ்டோல்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 24 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து – இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பிரிஸ்டோலில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், ஜெமீமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் இணை அதிரடியாக விளையாடி ஆளுக்கொரு அரை சதம் விளாசினர். ஜெமீமா 63 ரன் (41 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரிச்சா கோசும் பொறுப்புணர்ந்து விளையாடினார். எனவே இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்தது. அமன்ஜோத் 63 (40 பந்து, 9 பவுண்டரி), ரிச்சா 32 (20 பந்து, 6 பவுண்டரி) ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர்.
அதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் களம் கண்டனர். தொடக்க வீராங்கனைகள் சோபியா டங்லி, டேனியலி நிகோல் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் நடாலியா புருன்ட் 13 ரன்னில் வெளியேறினார். அதனால் அந்த அணி 3.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு வந்தவர்களில் டம்மி பிவ்மன்ட் 54, சோபி எக்கல்ஸ்டோன் 35, ஆமி ஜோன்ஸ் 32 ரன் அடித்து ஸ்கோர் உயர உதவினர். இருப்பினும் இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியா 24 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய வீராங்கனைகளில் சாரணி 2 விக்கெட் வீழ்த்தினார். அமன் ஜோத் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.