லண்டன்: இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வொர்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்டில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகிய நிலையில், கேப்டனான முதல் போட்டியிலேயே வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளார் ஆலிவர் போப். தொடர்ச்சியாக 2வது டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியை களமிறங்குகிறது.
தனஞ்ஜெயா டி சில்வா தலைமையிலான இலங்கை அணி 2வது இன்னிங்சில் காட்டிய வேகத்தை முதல் இன்னிங்சிலும் காட்டியிருந்தால் டிரா செய்திருக்கலாம். குசால் மெண்டிஸ், விஷ்வா பெர்னாண்டோவுக்கு பதிலாக பதும் நிசங்கா, லாகிரு குமாரா சேர்க்கப்பட்டுள்ளனர். அறிமுக போட்டியிலேயே அரை சதம் விளாசிய மிலன் ரத்ணநாயகே (72ரன்), கேப்டன் தனஞ்ஜெயா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமல், 2வது இன்னிங்சில் சதமடித்த கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம். தொடரை கைப்பற்ற இங்கிலாந்தும், பதிலடி கொடுக்க இலங்கையும் வரிந்துகட்டுவதால் லார்ட்ஸ் டெஸ்டில் அனல் பறப்பது உறுதி.