லண்டன்: இங்கிலாந்தில் கோழி இறைச்சி மூலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 10 பேர் கும்பலுக்கு தலா 16 ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பத்து நாட்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். முதலில் பிர்மிங்காம் பகுதியில் வந்த இறைச்சி வேனை போலீசார் சோதனை செய்ததில் அதில் சுமார் 150கிலோ கோகைன் மறைத்து வைத்து கடத்தியது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் போலீசாரிடம் சிக்கினார்கள். இந்த கும்பலிடம் இருந்து 400கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாகனங்களின் டயர்களில் பதுக்கி வைத்து எடுத்து செல்லப்பட்ட ரொக்க பணத்தையும் போலீசார் இந்த கும்பலிடம் இருந்து கைப்பற்றினார்கள்.
தடை செய்யப்பட்ட ஏ பிரிவு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மனீந்தர் தோசன்ஜ்க்கு 16 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிகத்து கடந்த வாரம் பிர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமான்தீப் ரிஷிக்கு 11 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கும்பலை சேர்ந்த மற்றவர்களுக்கும் தலா 16 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.