நார்தாம்ப்டன்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, வரும் 20ம் தேதி முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதற்கு முன்னதாக, இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஏற்கனவே நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. அதையடுத்து, நேற்று முன்தினம் 2வது டெஸ்ட் போட்டி துவங்கியது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின் வந்தோரில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (11 ரன்), கருண் நாயர் 40 ரன்), துருவ் ஜுரெல் (52 ரன்), நிதிஷ் குமார் (34 ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து ஆடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல், 62வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர், 168 பந்துகளை சந்தித்து, ஒரு சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 116 ரன் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால், இந்தியா ஏ, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு, 319 ரன் குவித்தது. இங்கிலாந்து லயன்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3, ஜார்ஜ் ஹில் 2, ஃபர்ஹான் அஹமது, டாம் ஹெய்ன்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.