யுனைடெட் கிங்டம் என்ற பெருமைக்குரிய இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடித்துள்ளது. அங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பெற்றுள்ள வெற்றி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரலாற்று பொக்கிஷங்கள் நிமிர்ந்து நிற்கும் இங்கிலாந்தில் 1.8 மில்லியன் என்ற அளவில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. இது அந்நாட்டு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறினர். இது ஒருபுறமிருக்க, நடந்து முடிந்த இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் முன்எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28பேர், நடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பதவி விலகிய இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிசுனக், ரிச்மண்ட் மற்றும் நார்தலர்டன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மற்றொரு இந்திய வம்சாவளியான கோவாவை சேர்ந்த கிளாரி கவுடின்ஹோவும் வெற்றி பெற்றுள்ளார். இந்தவகையில் ஷிவானிராஜா, சுயலாபிரேவர்மேன், பிரீத்திபடேல், நீல்சாஸ்திரி, கனிஷ்கா நாராயணன், நவேந்து மிஸ்ரா, ப்ரீத்கவுர்கில், தன்மனஜீத்சிங், வேலரீவாஸ், சோனியாகுமார் துட்லே, ஹர்ப்பிரீத் உப்பல், சீமா மல்ஹோத்ரா, வாரீந்தர்ஜஸ், குரீந்தர்ஜோசன், ஜஸ்அத்வால், பேகிஷங்கர், சாத்வீர்கவுர், சுகன்மொஹிந்திரா, நிஷாநந்தி, நதியாவிட்டோம், ஜூவுன்சாந்தர், முனிராவில்சன், லிசாநாண்டி, சுரீனாபிராக்கன்பிரிட்ஜ், கிரித் என்ட்விசில் உள்ளிட்ட 28பேர் இங்கிலாந்தின் பெருமைக்குரிய இந்தியவம்சாவளி எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் கட்சி, பழமைவாத கட்சி என்று அரசியல் பின்புலங்கள் மட்டுமன்றி சுயேட்சையாகவும் நமது வம்சாவளிகள் தேர்தலில் நின்று மாபெரும் வெற்றியை தழுவியுள்ளனர். இங்கிலாந்தில் இந்திய வம்சவாளியின் பாய்ச்சல் ஒரு தனித்துவம் என்றால், அங்கே தமிழினத்தின் பிரதிநிதியும் இடம் பிடித்து பிரமிக்க வைத்துள்ளார். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் மங்கையான உமா குமரன் 19,145 வாக்குகள் பெற்று வாகை சூடியுள்ளார் என்பதும் நமக்கான தனிச்சிறப்பு. கிழக்கு லண்டனில் பிறந்த உமாகுமரன் இலங்கையில் வேரூன்றியவர்.
இவரது பெற்றோர் 1980ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் போது இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்கள். உமாகுமரன் தொழிலாளர் கட்சியில் சேர்வதற்கு முன்பு என்.ஹெச்.எஸ்.நிபுணர்களுக்காக பணியாற்றினார். அப்போது பொருளாதாரத்தில் மட்டுமன்றி வணிகம், கலை, கலாச்சாரம், பொதுச்சேவைகளில் மிகுந்த பங்களிப்பை செலுத்தியுள்ளார். இதன்காரணமாகவே கடந்த 2010ம் ஆண்டில் நழுவிய வெற்றி இப்போது அவரது வசமாகியுள்ளது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழ்மூதாட்டி அவ்வையின் பொன்மொழி. கடல்கடந்து வெளிநாடுகளுக்கு சென்று உழைத்தும் பொருள் சேர்ப்பது அவசியம் என்பதே இந்த பொன்மொழியின் பொருள். அப்படி ஒரு காலத்தில் நமது தாய்மண்ணை விட்டுச் சென்றவர்களின் வாரிசுகளே உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதேபோல் உள்நாட்டின் போர் நிகழ்வுகளும் பலரை, புலம் பெயரச்செய்கிறது. இப்படி செல்வோர், தங்களது இன்னல்களை மறந்து அரிய உழைப்பை செலவிடுகின்றனர். அந்தநாட்டின் முன்னேற்றத்திற்கும் அவர்களது பங்களிப்பு பெரும்பலமாக நிற்கிறது. நிச்சயமாக கடின உழைப்பும், உண்மையான விசுவாசமும் எந்த இடமாக இருந்தாலும் ஒரு மனிதனை உச்சத்திற்கு கொண்டு செல்லும். அதற்கு உதாரணமாக இங்கிலாந்தில் இப்போது உயர்ந்து நிற்கின்றனர் நமது வேர்களான இந்திய வம்சாவளிகள் என்பதே நிதர்சனம்.