இஸ்லாமாபாத்: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு சிறையில் இருக்கும் இம்ரான்கான் போட்டியிட்டுள்ளதால், அரசியல் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன; பல வழக்குகள் பாகிஸ்தான் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இதற்கிடையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு இம்ரான்கான் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தற்போதைய வேந்தரான கிறிஸ் பாட்டன் ஓய்வு பெற்றதால், புதிய வேந்தரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மூலம் புதிய வேந்தர் தேர்வு செய்யப்படுவதால், இந்த பதவிக்கு போட்டி அதிகரித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில், அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுடன் இம்ரான்கானுக்கு நீண்ட தொடர்பு உள்ளது.
அதனால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் விண்ணப்பித்துள்ளார். இவர் இந்தப் பதவிக்கு போட்டியிடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் 2005 முதல் 2014 வரை பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தார்; ஆனால் 2014ல் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இம்ரான் கானின் இந்த முடிவு பாகிஸ்தான் அரசியலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு இம்ரான்கான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.