பர்மிங்காம்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஆடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேமி ஸ்மித், பென் டக்கெட் அபாரமாக ஆடி சிறப்பான துவக்கத்தை தந்தனர். ஸ்கோர் 64 ஆக இருந்தபோது, ஜேமி ஸ்மித் (37 ரன்) அவுட்டானார்.
அதன் பின் வந்தோரும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பென் டக்கெட் (60 ரன்), ஜோ ரூட் (57 ரன்), கேப்டன் ஹேரி புரூக் (58 ரன்), ஜோஸ் பட்லர் (37 ரன்), ஜேகப் பெத்தேல் (82 ரன்), வில் ஜாக்ஸ் (39 ரன்), என ரன்களை விளாசியதால், 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 400 ரன் குவித்தது. பின்னர், 401 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சால், விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 26.2 ஓவரில், வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 162 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 238 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றது. இந்த அணிகள் இடையே 2வது ஒரு நாள் போட்டி இன்றும், 3வது ஒரு நாள் போட்டி வரும் 3ம் தேதியும் நடைபெற உள்ளன.