சென்னை: இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜோ ரூட் காணொளி காட்சி மூலம் நேற்று இந்திய செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஜோ ரூட், ‘டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 5வது இடத்தில் இருக்கும் நான் 4வது இடத்துக்கு முன்னேற இன்னும் தேவையான 282ரன்னை இந்த தொடரில் எடுப்பீர்களா? முதல் இடத்தில் இருக்கும் சச்சின் டென்டுல்கர் சாதனையை முறியடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கிறீர்கள். என்னைப் பொருத்தவரையில் ஆட்டத்தை அனுபவித்து ஆட விரும்புகிறேன். அதன் முடிவு அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. அதை மீறி வேறு எது குறித்தும் நான் யோசிக்கவில்லை. அதேநேரத்தில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, அஷ்வின் ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு நடைபெறும் டெஸ்ட் என்பதால் இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது.
புதுக் கேப்டன், அனுபவமில்லாத பேட்டிங் வரிசை என்று சொல்கிறீர்கள். அது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்திய அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. ஏற்கனவே டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். ’ என்றார். இந்த தொடரில் எந்த இந்திய வீரர் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பார் என்பதை கணிக்க முடியாது. இரண்டு அணிகளிலும் திறமையான, அதிரடி வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சூழ்நிலையும், கள நிலைமையும் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார்.