சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. அனைத்து சிறப்பு பிரிவு கலந்தாய்வுகளும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி, கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 16,096 இடங்கள் நிரம்பின. இதையடுத்து 2வது சுற்று கலந்தாய்வு கடந்த 9ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் 5,267 இடங்களும், பொது பிரிவில் 35,474 இடங்களும் என மொத்தம் 40,741 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை அனைத்து வகை கலந்தாய்வு முடிவில் 56, 837 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதை தொடர்ந்து 3வது சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. விருப்ப இடங்களை தேர்வு செய்ய நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 89 ஆயிரத்து 694 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 3ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.