சென்னை :தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், “விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 2.41 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tneaonline.rog இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பம் அளித்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், கடலூர் மாணவி தரணி முதலிடம், சென்னை மாணவி மைதிலி 2ம் இடம் பிடித்துள்ளனர். பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 கட் ஆஃப் 145 பேர் பெற்றுள்ளனர். பொது பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களில், 7 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். மாநில அளவில் பொறியியல் தரவரிசை பட்டியலில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் பிடித்துள்ளனர்.
பொறியியல் பொதுப்பிரிவு தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா 2ம் இடம் பிடித்துள்ளார். பொறியியல் பொதுப்பிரிவு தரவரிசை பட்டியலில் அமலன் ஆன்டோ என்பவர் 3ம் இடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் 11 வரை நடைபெறுகிறது. பொறியியல் படிப்புக்காக துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.