Monday, June 23, 2025
Home மகளிர்கலைகள் காரில் பிரவுனி விற்கும் பொறியியல் பட்டதாரி!

காரில் பிரவுனி விற்கும் பொறியியல் பட்டதாரி!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

‘‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” என்ற கவிஞரின் கூற்றுக்கு ஏற்ப பேக்கரி தொழிலில் சில புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டு வருகின்றனர் சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி, மணிகண்டன் தம்பதியினர். பொறியியல் படித்து விட்டு பேக்கரி துறையில் சாதித்து வரும் மனைவி ஜெகதீஸ்வரியின் ‘‘மாம் மேட் கேக்” தயாரிப்புகளுக்கான புதுமையான விற்பனை பிரிவை திறம்பட கவனித்துக் கொள்பவர் அவரது கணவர் மணிகண்டன்தான். சென்னை அண்ணா நகர் பகுதியில் வாகனத்தில் வைத்தே கணிசமான அளவில் பிரவுனி மற்றும் கேக் வகைகளை விற்பனை செய்து அசத்துகிறார்கள் இவர்கள். தனது பேக்கரி துறை குறித்தான அனுபவங்கள் மற்றும் அதன் நவீன விற்பனை முறைகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் ஜெகதீஸ்வரி மணிகண்டன்.

பேக்கரி தொழில் செய்ய சிறப்புக் காரணங்கள்!

எனது சொந்த ஊர் திண்டுக்கல். குழந்தைகள் படிப்பிற்காக சென்னைக்கு வந்துட்டோம். தற்போது வானகரத்தில் வசித்து வருகிறோம். அடிப்படையில் நான் பொறியியல் பட்டதாரி. திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள், குடும்பம் என வெளியே சென்று வேலை செய்யும் சூழல் அமையவில்லை. எனது குழந்தைகளுக்காக வீட்டில் இருக்கும் ஓய்வு நேரத்தில் பிரவுனி தயாரிக்க பழகிக் கொண்டேன்.

விதவிதமான பிரவுனி வகைகளை ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு மேல் நானே தயாரித்து பழகிதான் இன்று பிரவுனியை பலவகை சுவைகளில் தயாரிக்க கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் செய்த போது சரியாக வரவில்லை. அதனால் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பேன். அப்படித்தான் ஒரு பிரவுனியை தயாரிப்பதற்கான சரியான பார்முலா எனக்கு அமைந்தது. முதலில் கேட்பவர்களுக்கு மட்டுமே செய்து கொடுத்து வந்தேன். தற்போது எனது பிரவுனி வகைகளுக்கு பலருமே ரசிகர்களாக மாறி விட்டார்கள். தினமும் மூன்று வகையான பிரவுனி வகைகளை, அதிகபட்சமாக ஐநூறுக்கும் அதிகமான பிரவுனிகள் தயாரித்து வழங்குகிறேன்.

காரில் பிரவுனி விற்பனை!

முதன்முதலில் நாங்கள் தயாரிக்கும் பிரவுனி வகைகளை அங்கேயுள்ள கடைகள் மற்றும் ஹோட்டலில் வைத்து விற்கதான் முயற்சிகள் செய்தோம். ஆனாலும் பலரும் எங்களின் தயாரிப்புகளை விற்றுத்தர சற்று தயங்கினார்கள். அப்போது எனது கணவர் தான் நம்முடைய தயாரிப்பு தரம் நமக்கு தெரியும். அதை ஏன் மற்றவர்களிடம் கொடுத்து விற்பனை செய்ய வேண்டும். நாமே விற்பனை செய்யலாமே என்று யோசனையை கூறினார். முதலில் நம்மால் அதனை விற்பனை செய்ய முடியுமான்னு தயக்கமா இருந்தது. ஆனால் நம்மால் விற்பனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் இருந்தது. எங்களின் காரிலேயே பிரவுனிகளை வைத்து விற்பனை செய்ய முடிவு செய்தோம்.

முதல் நாள் தயக்கத்துடன் நூறு பிரவுனிகளை தயார் செய்து எடுத்துக்கொண்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள ஃபுட்கோட் சாலையில் காரில் எங்களது பிரவுனிகளை வைத்து காத்திருந்தோம். அப்போது பலரும் இது என்ன என அதிசயத்துடன் கேட்டு விட்டு சென்றனர். பலர் வாங்கி சுவைக்க ஆரம்பித்தனர். முதல் நாளில் எண்பது பிரவுனிகள் விற்பனையானது. அது எங்களுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட துவங்கியது.

நூறு பிரவுனிகளை விற்பனை செய்தோம், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையினை அதிகரித்து இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட பிரவுனிகளை விற்பனை செய்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக தினமும் காலை பிரவுனி செய்வது மாலை அதனை எடுத்துக்கொண்டு விற்பனை செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களிடையே கிடைக்கும் ஆதரவும் அன்பும் அபரிமிதமாக இருக்கிறது. எங்களது தரம் மற்றும் விலைக்காகவே ஏராளமான வாடிக்கையாளர்கள் எங்களை தேடி வருகிறார்கள்.

தினமும் பிரவுனி தயாரித்து விற்பனை செய்வதும் சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. நாளடைவில் அது எங்களுக்கு ரொம்பவுமே பிடித்தும் விட்டது. ஆரம்ப நாட்களில் எங்களால் சில நேரங்களில் பிரவுனி செய்ய இயலாமல் போகும். அப்போது மறுநாள் போகும் போது ரெகுலராக வரும் வாடிக்கையாளர்கள் ஏன் வரவில்லை என கேட்க துவங்கினார்கள். சில வாடிக்கையாளர்கள் எங்களின் பிரவுனியை தான் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்கள், குழுந்தைகளும் பிரவுனி சாப்பிட அழைத்து வந்தார்கள். நாங்க விற்பனைக்கு போகாத நாட்களில் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதனால் தற்போது நாள் தவறாமல் பிரவுனி செய்து விற்பனைக்கு சென்று விடுகிறோம். அப்பகுதி குழந்தைகள் என் கணவரை ‘பிரவுனி அங்கிள்’ என்று அழைக்க துவங்கி விட்டார்கள்.

உண்மையில் இத்தொழில் வியாபாரம் என்பதை தாண்டி பெரும் மனநிறைவாக இருக்கிறது. தற்போது எங்களைப் பார்த்து நிறைய பெண் தொழில்முனைவோர்கள் இப்படி வாகனத்தில் விற்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். மேலும் கல்லூரிக்கு போகும் பிள்ளைகள் பலரும் எங்களிடம் எங்களின் விற்பனை முறைகள் குறித்து ஆர்வமாக கேட்டுக்கொள்கிறார்கள்.

அவர்களும் தங்களின் படிப்பு முடிந்ததும் இத்தொழிலில் இறங்கப் போவதாக கூறுகிறார்கள். அதில் சிலர் எங்களிடம் ஆலோசனைப் பெற்று டூ வீலரில் விற்பனையை துவங்கி இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் சொன்ன போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது குறித்து ஆலோசனை கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாகவே சொல்லித் தருகிறோம்.

உங்களது இதர தயாரிப்புகள்!

நாங்கள் பர்த்டே கேக் வகைகளும் விழாக்கால கேக்குகளையும் கூட ஆர்டரின் பேரில் தயாரித்து தருகிறோம். அதே போன்று பிரவுனியில் ரெட்வெல்வெட், டார்க் சாக்லேட், ஃப்ட்ஜ் என மூன்று வகையான பிரவுனிகளை தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்களிடம் பிரவுனி வாங்கும் வாடிக்கையாளர்கள் அதன் சுவை பிடித்துப் போக தங்களின் பிறந்தநாள் கேக்கினை கஸ்டமைஸ் செய்து தரச்சொல்லி கேட்கிறார்கள். அவர்களின் விருப்பம் போல் நாங்க கஸ்டமைஸ் செய்து தருகிறோம். மேலும் எங்களின் கேக்குகள் அனைத்தும் தரமானதாகவும், குறைந்த விலையில் தருகிறோம். எங்களின் சமூகவலைத்தளங்கள் மூலமும் ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம்.

நீங்க சந்திக்கும் சவால்கள்!

நாங்க காரினை சாலையில் நிறுத்தி தான் விற்பனை செய்கிறோம். இதனால் தினமும் பல சவால்களை எதிர்கொண்டு தான் வருகிறோம். ஒரு கடை போல் அமைத்து விற்பனை செய்ய எங்களிடம் ேபாதுமான வசதி இல்லை. அதனால், தற்போது நாங்க தயாரிப்பதை நேரிடையாகவே விற்பனை செய்கிறோம். மற்றவர்களிடம் அளித்தால் அதே பொறுப்புடன் அதே அக்கறையுடன் மலிவான விலையில் தருவார்களா என்று தெரியாது. ஆனால் எதிர்காலத்தில் விற்பனைக்கான தனி அவுட்லெட் வைக்கவேண்டும் என்ற ஆசை இருக்கு. தற்போது அண்ணாநகர் பகுதியில் மட்டுமே விற்பனை செய்கிறோம். மற்ற இடங்களிலும் விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கென ஆர்வத்துடன் கடுமையாக உழைத்து வருகிறோம். கண்டிப்பாக அதற்கான பலன்கள் எங்களை தேடி வரும் என்று நம்புகிறோம்.

உங்களது தொழிலுக்கான ஒத்துழைப்பு!

என் குடும்பம்தான் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். ஒவ்வொரு நாள் காலை பிரவுனி மற்றும் கேக் தயாரிப்பது என வேலைகள் இருக்கும். நான் அதில் என் முழு கவனத்தை செலுத்துவதால், வீட்டுப் பெரியவர்கள் சமையல் முதலான மற்ற வீட்டு வேலைகளை பொறுப்பெடுத்து செய்து விடுகிறார்கள். நான் தயாரித்து தருவதை டெலிவரி மற்றும் விற்பனை செய்வது என் கணவர். அவர் சொந்தமாக தொழில் செய்து வந்தாலும், என்னுடைய தொழிலுக்கு முழு ஒத்துழைப்பினை தருகிறார். எனது குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் நிச்சயமாக என்னால் இத்துறையில் சாதித்து இருக்கவே முடியாது. எனது தொழில் வியாபாரங்களின் வெற்றிகளுக்கு எனது குடும்ப உறுப்பினர்கள் ஆதரவே பெரும் காரணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கான ஆலோசனை…

உங்களிடம் இருக்கும் திறமைகளை தைரியமாக வெளியே கொண்டு வாருங்கள். உங்களுக்கு பிடித்த மற்றும் தெரிந்த துறையில் துணிந்து இறங்கினால், வெற்றிக்கான வழிகள் தானாகவே கிடைத்து விடும். உங்களுக்கென தனி பாணியை வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் புதுப்புது நவீன உத்திகளை பயன்படுத்தி பாருங்கள் வாய்ப்புகள் தானாக உங்களை தேடி வரும்’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெகதீஸ்வரி மணிகண்டன்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

 

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi