சென்னை: இன்ஜினியரிங் முதல் கட்ட கலந்தாய்வில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 31 இடங்கள் நிரம்பி உள்ளன. கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, சிறப்பு விருப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 836 மாணவ, மாணவிகளுக்கு இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பொப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 17 ஆயிரத்து 679 மாணவர்களும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 1,115 மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் படிப்பு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது சுற்று கலந்தாய்வில், பொதுப்பிரிவில் 43 ஆயிரத்து 403 மாணவர்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 6 ஆயிரத்து 950 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
3வது சுற்று கலந்தாய்வு, கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதில், பொதுப்பிரிவில் 68 ஆயிரத்து 198 மாணவர்கள் பங்கேற்று விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் தகுதியான 48 ஆயிரத்து 151 மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்ற 14 ஆயிரத்து 495 மாணவர்களில், 3 ஆயிரத்து 769 மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொழிற்கல்வி மாணவர்களை பொருத்தவரையில், பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 1,129 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு பிரிவு மற்றும் பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 31 இன்ஜினியரிங் படிப்பு இடங்கள் நிரம்பி உள்ளன. 70 ஆயிரத்து 403 இடங்கள் காலியாக உள்ளன. துணை கலந்தாய்வு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 4ம் தேதி வரை https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.