சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 433 இன்ஜினியரிங் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 79,938 இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 836 மாணவ, மாணவிகளுக்கு இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி தொடங்கியது. தற்போது, 2 சுற்று கலந்தாய்வுகள் முடிவுற்றுள்ளன. இதில், பொதுப்பிரிவில் 62 ஆயிரத்து 802 மாணவர்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 8 ஆயிரத்து 308 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் தற்போது 71 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. 2 சுற்றுகள் முடிவில், மொத்த இடங்களில் 39 % இடங்கள் நிரம்பி உள்ளன. 2 சுற்றுகள் நிறைவில், சென்னை கிண்டி வளாக கல்லூரி (சி.இ.ஜி), எம்.ஐ.டி உள்பட 4 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பி உள்ளன. மேலும், 14 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஒன்றிய கல்வி நிறுவனங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இன்ஜினியரிங் படிப்பு இடங்கள் நிரம்பி உள்ளன.
சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகள் 21ல் 90% இடங்கள் நிரம்பின. 57ல் 80%இடங்களும், 114 கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களும் நிரம்பி உள்ளன. அதேநேரம், 30 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும், 197 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்ஜினியரிங் படிப்பு 3வது சுற்று கலந்தாய்வு வருகிற செப்டம்பர் மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை வரை மாணவர்கள், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.