சென்னை: இன்ஜினியரிங் 2வது சுற்று கலந்தாய்வில் 63 ஆயிரத்து 729 மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2வது சுற்று கலந்தாய்வு 10ம் தேதியன்றே தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 77 ஆயிரத்து 948 பேர் பங்கேற்க தகுதியுள்ளவர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 62 ஆயிரத்து 270 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்து இருந்தனர். அதில் 55 ஆயிரத்து 875 மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் 9 ஆயிரத்து 494 பேர் தகுதியுள்ளவர்களாக அழைக்கப்பட்டு, அவர்களில் 8,738 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அதில் 7 ஆயிரத்து 854 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன. ஆக மொத்தம் 2வது சுற்றில் 63 ஆயிரத்து 729 மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் அதனை உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு ஆணை பெறுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, 23ம் தேதியுடன் 2வது சுற்று நிறைவு பெற உள்ளது.