இன்றைய இளம் தலைமுறையினரிடையே கல்வி மீதான நாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாகப் பெண்கள் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். ஒருகாலத்தில் கல்வி அறிவாற்றலை வளர்ப்பதற்கானதாக மட்டுமே பார்க்கப்பட்டது. இன்று கல்விதான் தனித்துவமாக அடையாளம் காட்டும் ஆயுதமாக விளங்குகிறது. இன்றைய நவீனகால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் படித்த பாடத்தை செயல்வடிவமாக காணவும், அதனைப் பின்பற்றி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சூழலும் மாணவர்களிடையே கல்வி மீதான நிலைப்பாடு மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கான ஊன்றுகோலாக விளங்குகிற்து என்றால் அது மிகையல்ல. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இளம் தலைமுறை மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையைச் சேர்ந்த 25 மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே அடுத்த ஆண்டு தலைநகர் டெல்லியில் ஐஎஸ்ஐஇ அமைப்பு(ISIE SOCIETY) சார்பில் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி நடைபெறுவதை அறிந்த மாணவிகள் அதில் பங்கேற்க முடிவு செய்தனர். போட்டியில் பங்கேற்க என்ன மாதிரியான கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம் என்று தீவிர யோசனையில் ஆழ்ந்த மாணவிகள் அத்துறையின் துணைப் பேராசிரியர் இளந்திரையன் வழிகாட்டுதலின்படி இ-பைக்கை உருவாக்க முடிவுசெய்தனர். இதற்கெனக் கடந்த அக்டோபர் மாதம் முதலே இ-பைக் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். இ-பைக் உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம்களுக்குச் சென்றும் வாங்கினர். பேட்டரி, மின் மோட்டார், சக்கரங்கள், ஒயர்கள் என எலக்ட்ரிக் வாகனத்திற்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்கி இ-பைக் உருவாக்கும் பணியில் குழுவாக இணைந்து முழுவீச்சில் ஈடுபட்டனர்.
‘விடா முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும்’ என்பதற்குச் சான்றாகக் கூட்டு முயற்சியின் மூலம் இ-பைக் உருவாக்கி அசத்திய மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவிகளின் சாதனை குறித்து துறைப் பேராசிரியர் இளந்திரையன் கூறுகையில், ‘‘எங்கள் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறை மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ஐஎஸ்ஐஇ அமைப்பு(ISIE SOCIETY) சார்பில் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி நடைபெறும். இதில், பொறியியல் துறை மாணவர்கள் உருவாக்கும் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி நடைபெறும். சிறந்த கண்டுபிடிப்பிற்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படி, வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள கண்காட்சியில் பங்கேற்க மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறை மாணவிகள் முடிவு செய்தனர்.
மேலும், நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையிலான இ-பைக் உருவாக்கலாம், என்று மாணவிகள் விருப்பம் தெரிவித்து அதற்கான பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். இ-பைக் உருவாக்கும் மாணவிகளின் கூட்டு முயற்சியைக் கண்ட கல்லூரியின் தலைவர் டாக்டர் பாபு மனோகரன், பேராசிரியர் மற்றும் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறைத்தலைவர் ஜெயராம் பிரதீப் ஆகியோர் மாணவிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். இ-பைக் உருவாக்கும் மாணவிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி வழிகாட்டினர். இ-பைக் உருவாக்கும் வகையில் 25 மாணவிகளும் தங்களால் இயன்றளவு பொருளுதவி அளித்தனர். அந்தப் பணத்தைக் கொண்டு பேட்டரி, சக்கரம், ஹேண்டல், ஃப்ரேம், சஸ்பென்ஷன்கள், மிட் டிரைவ் மின்மோட்டார் உள்ளிட்ட பாகங்களைக் கொண்டு இ-பைக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு சோதனை ஓட்டத்திலும் வெற்றிபெற்றனர்’‘ மேலும் தொடர்ந்த பேராசிரியர் இளந்திரையன் ‘‘கடந்த மாதம் 23ம் தேதி கோவை ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடந்த கண்காட்சியில் எங்கள் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவு மாணவிகள் கலந்துகொண்டு 4 விருதுகள் பெற்றுள்ளனர். இது டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறுவதற்கான முன்னோட்டம்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து, இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்கள் குறித்து ஆர்வத்துடன் விவரித்த மாணவி ஒருவர் ‘‘எங்கள் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறையின் Zircons அணியைச் சேர்ந்த மாணவிகள் ஒன்று சேர்ந்து கூட்டு முயற்சியில் உருவாக்கியுள்ள இ-பைக் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கியுள்ளோம். இந்தப் புதுமையான மின்சார வாகனம் தற்சார்பு நெறியியல் திறன் உள்ள மற்றும் நிலையான தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பூஜ்ஜியம் கரிஅமிலவாயு மற்றும் பூஜ்ஜிய ஒலி மாசுபாடு ஏற்படாத வகையில் நிலைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சாலைகளிலும், கரடுமுரடான சாலைகளிலும் இயங்கும் வகையில் வாகனத்தின் பின்புறத்தில் 17 இன்ச் ஓபன் காயில் மோனோ ஷாக் அப்சர்பரும், பின்புறத்தில் டியூபுளர் ஷாக் அப்சர்பர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் வாகனத்தில் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் வெகுவாகக் குறைந்து சக்கரங்களில் ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்கிறது. இதனால், இலகுவான பயண அனுபவம் ஏற்படும். மேலும், பேட்டரி கார்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த உயர்தரம் வாய்ந்த லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் முழுமையாக பேட்டரி சார்ஜ் ஏறிவிடும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை பயணிக்கலாம். பழைய ஸ்விங் டைப் தொழில்நுட்பத்தில், நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களைச் செய்து மிட் டிரைவ் மின் மோட்டாரைக் கொண்டு பேட்டரியின் உதவியுடன் இந்த இ-பைக் இயங்குகிறது. சுமார் ₹90 ஆயிரம் மதிப்பில் இந்த இ-பைக் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து இன்னொரு மாணவி கூறும்போது ‘‘இ-பைக் உருவாக்கிய பொறியியல் மாணவிகள் தங்கள் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி, மனித சமுதாயத்திற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட வேண்டும், என்று ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.’’ என்றார். இதையடுத்து ‘‘வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் எலக்ட்ரிக் பைக் டிசைன் அண்ட் சேலஞ்ச் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோம். அடுத்த கட்டமாக சூரிய சக்தி மூலமாக இயங்கும் வகையில் கார் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம்’’ என்று மாணவிகள் அனைவரும் ஒருமித்த குரலில் வெற்றி முழக்கமிட்டனர்.
– இர.மு.அருண்பிரசாத்