சென்னை: ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (ஏஐ) படிப்பை இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். எதிர்காலத்தில் ஏ.ஐ.படிப்புக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் மாணவர்களின் தேர்வில் இந்த படிப்பும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்கள் உள்ளன. இதையடுத்து இந்த கல்வியாண்டில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை 3 சுற்றுகளாக நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவிகிதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இதில் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் இடத்திலும், இசிஇ இரண்டாம் இடத்திலும், ஐடி பாடப்பிரிவு 3வது இடத்திலும் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளது. இந்த நான்கு படிப்புகளையும் இந்த ஆண்டு 10% மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் படிக்க தற்போது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் பல கல்லூரிகளும் இந்த பாடப்பிரிவை தொடங்கியுள்ளன. 2020ம் ஆண்டு 70 கல்லூரிகளில் மட்டுமே இருந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் படிப்பு இந்த வருடம் 270 கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘‘ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் படித்தவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வருடம் மாணவர் சேர்க்கையும் இதில் அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு தகுதியான ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே மாணவர்களால் இந்த படிப்பை முழுமையாக பயின்று வெளியே வர முடியும். மேலும் கலந்தாய்வில் பங்கேற்ற 442 பொறியியல் கல்லூரிகளில் 61ல் மட்டும் 10%ம் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். துணைக் கலந்தாய்வில் இந்த கல்லூரிகளில் மீதம் உள்ள இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.