பூந்தமல்லி: வளசரவாக்கம் அருகே, சாலை விபத்தில் இன்ஜினியர் பரிதாபமாக பலியானார். சென்னை போரூர், சக்தி நகரை சேர்ந்தவர் தீபக் (37). இவர், வளசரவாக்கம் அருகே ராமாபுரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலைபார்த்தார். நேற்று முன்தினம் மாலை இவர் வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மவுண்ட்-பூந்தமல்லி சாலையில், ராமாபுரம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கிரேன் பைக் மீது வேகமாக மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே தீபக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய கிரேன் டிரைவர் தினேஷ்(30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.