சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை பாங்காக் செல்ல வேண்டிய தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு வந்திறங்குவது வழக்கம். பின்னர், சென்னையில் இருந்து அந்த விமானம் அதிகாலை 1.10 மணியளவில் பயணிகளுடன் பாங்காக் புறப்பட்டு செல்லும்.
அதன்படி, பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பதில், தாமதமாக நள்ளிரவு 12.45 மணியளவில் சென்னைக்கு வந்து வந்திறங்கியது. அந்த விமானத்தின் விமானி, இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதை பழுதுபார்த்த பிறகுதான் மீண்டும் இயக்க முடியும் என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, சென்னையில் தாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக பாங்காக் செல்லவிருந்த 164 பயணிகளிடம், அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்து, அவர்களை சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைத்தனர்.
ஆனால் இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடிவில்லை. இதனால் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு இருந்த 164 பயணிகளும், சென்னை நகர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையில் விமானத்தின் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு, இன்று அதிகாலை மீண்டும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காக் புறப்பட்டு சென்றது.
* அவசரமாக தரையிறங்கிய விமானம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை 3.40 மணியளவில் 159 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 165 பேருடன் ஐதராபாத் புறப்பட்டு சென்றது. நெல்லூரைக் கடந்து நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார். இதையடுத்து, விமானம் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி, 4.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.