மும்பை: குற்றச் செயலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதி கொடுத்ததால் ஓராண்டு சிறை தண்டனையில் இருந்து நடிகர் ஆதித்யா பஞ்சோலியை மும்பை அமர்வு நீதிமன்றம் விடுவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலி, கடந்த 2005ம் ஆண்டு வாகனம் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாருடன் தகராறு செய்தார். தகராறு கைகலப்பாக மாறியது. அண்டை வீட்டாரை ஆதித்யா பஞ்சோலி தாக்கியதாக அவர் மீது அந்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் (அந்தேரி) நீதிமன்றம் கடந்த 2016ல் பிறப்பித்த தீர்ப்பில், ஆதித்யா பஞ்சோலியை குற்றவாளி என்றும், ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு கூடுதல் அமர்வு நீதிபதி டி.ஜி.தோப்ளே முன் விசாரணைக்கு வந்தது. அவர் அளித்த தீர்ப்பில், ‘வாகன நிறுத்துமிடத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆதித்யா பஞ்சோலி மீதான தண்டனையை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்கிறது. அதேநேரம் நன்னடத்தை பத்திரத்தின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இருப்பினும், குற்றவாளியான ஆதித்யா பஞ்சோலி சிறை விடுதலையின் பலனைப் பெற்றதற்காக, அவரால் தாக்குதலுக்கு ஆளான பாஷினுக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். அதனால் ரூ.15,000 பத்திரம் மூலம் அடுத்த ஓராண்டுக்கு அமைதியாகவும், நல்ல நடத்தையுடன் இருப்பதாகவும், எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்றும் நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். விடுதலைக்கான நிபந்தனைகள் ஏதேனும் மீறப்பட்டால், ஆதித்யா பஞ்சோலிக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றத்திற்கு முழு சுதந்திரம் உண்டு என்று அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.