திருவள்ளூர்: ஒன்றிய பாசிச பாஜ அரசை கண்டித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 150 நாட்கள் 3500 கிலோமீட்டர் தூரம் நாடு முழுவதும் இந்தியா ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி எம்பி நடத்தி முடித்தார். இதன் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டும் இதனை கொண்டாடும் விதமாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை இந்தியா நடைபயண நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில, நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ், ஒய்.அஸ்வின் குமார், ஜே.கே.வெங்கடேஷ், திவாகர் சுயம் பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் தளபதி மூர்த்தி, வடிவேலு, வி.எஸ்.ரகுராமன், புங்கத்தூர் அருள், சுந்தரவேலு, கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வழக்கறிஞர் வி.இ.ஜான் வரவேற்றார்.
திருவள்ளூர் ஆயில்மில் அம்பேத்கர் சிலையில் தொடங்கிய ஒற்றுமை இந்தியா நடைபயணம், ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை வரை சென்று நிறைவு பெற்றது. அப்போது துரை சந்திரசேகர் எம்எல்ஏ பேசுகையில், ‘50 ஆண்டுகளாக நாட்டை ஒற்றுமையாக கட்டி காத்தது காங்கிரஸ் கட்சி. சனாதனம் குறித்து பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் வீட்டில் அமலாக்க துறை சோதனை நடத்துமா? எங்களுக்கு அகிம்சை வழியில் போராடவும் தெரியும், அராஜகத்தில் ஈடுபடுபவர்களை அடக்கவும் தெரியும்’ என்றார். இதில் வட்டார தலைவர்கள் ஜி.எம்.பழனி, ராமன், முகுந்தன், சதீஷ், மற்றும் செல்வகுமார், வி.எம்.தாஸ், குமார், ஈஸ்வரன், உதயசந்தர், கௌதம், சபீர் உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.