சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் 100 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை விசாரணையின்போது, பாஜவில் ஏன் இணையக்கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது என்றார். அமைச்சர் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ெஜனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை விசாரணையின் போது, பாஜவில் ஏன் இணையக் கூடாது என்று அமலாக்கத் துறை கேட்கவில்லை. விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோர முடியாது.
செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதால், செல்வாக்கான அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ஏற்கனவே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு இதே நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோர முடியாது. அவர் குற்றம் செய்யவில்லை என்பதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. எனவே, வழக்கின் தன்மை அடிப்படையிலும், மருத்துவ காரணங்கள் அடிப்படையிலும் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.