புதுடெல்லி: ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் சிந்தன் ரகுவன்ஷி துணை இயக்குநராக பதவி வகித்து வந்தார். தென்கனல் பகுதியில் சுரங்க தொழில் செய்து வரும் ரசிகாந்த ரவுத் என்பவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ரவுத்தை விடுவிக்க ரகுவன்ஷி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசியதில், லஞ்சத்தொகை ரூ.2 கோடியாக குறைக்கப்பட்டது.
இதுகுறித்து சிபிஐயிடம் ரவுத் புகாரளித்துள்ளார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், முதல் தவணையாக ரூ.20 லட்சம் லஞ்சம் தருவதாக ஒப்பு கொண்டு சிந்தன் ரகுவன்ஷி அலுவலகத்துக்கு ரவுத் சென்றார். அங்கு ரவுத்திடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சிந்தன் ரகுவன்ஷியை சிபிஐ அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.