சென்னை: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை கோரும் பாரிவேந்தரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதாக 2016-ல் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்களை ஏமாற்றியதாக வேந்தர் மூவிஸ் இயக்குநராக இருந்த மதன், எஸ்ஆர்எம் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் பாரிமுத்து மீது வழக்கு தொடரப்பட்டது.
மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றிய குற்றச்சாட்டில் பாரிவேந்தரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. பின்னர் ஜாமினில் வெளிவந்த பாரிவேந்தர், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களுக்கு ரூ.88 கோடியை திருப்பி அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதே நேரத்தில் ரூ.88 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்துவுக்கு கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளில் ED சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரிவேந்தர் வழக்கு தொடர்ந்தார். பாரிவேந்தர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு, ED நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.