புதுடெல்லி: அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக ஜார்க்கன்ட் முதல்வர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக உள்ளார். கடந்த ஆண்டு அவர்மீது சுமத்தப்பட்ட நில மோசடி, பண மோசடி மற்றும் கனிம வள கொள்ளை ஆகிய வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 3ல் அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில், அவர் ஆஜராகவில்லை. பின்னர் 14 நாட்கள் கழித்து அனுப்பிய சம்மனுக்கு ஹேமந்த் சோரன் ஆஜரானார். அப்போது அவர் அமலாக்கத்துறையால் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்ற ஆகஸ்ட் 14 அன்று அமலாக்கத்துறை விசாரணைகளுக்கு ஆஜராவதிலிருந்து தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஹேமந்த் சோரன் இந்த விஷயத்தில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை தாராளமாக அணுகலாம் என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.