சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு இல்லம் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அற்ப அரசியல் காரணங்களுக்காக என்பதால் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த மாநிலங்களில் பாஜக வெற்றி பெற முடியாது என்பதால் ஆளும் கட்சியின் மீது மக்கள் மத்தியில் ஊழல் முத்திரை குத்தி அதன் மூலம் அரசியல் லாபமடைய மோடி அரசு முயற்சிக்கிறது.
இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மோடி அரசுக்கு முடிவுரை எழுத உள்ளது. அதனை தொடர்ந்து நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற உள்ளது. எனவே இந்த அச்சத்தின் காரணமாக தான் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை அச்சுறுத்திட, அசிங்கப்படுத்திட இப்படிப்பட்டகேவலமான செயல்களில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவை கருத்தியியல் ரீதியாக விமர்சிப்பதிலும் அந்த கட்சி ஆட்சியை அகற்றிவிட்டு ஒன்றியத்தில் ஜனநாயக அரசை அமைப்பதிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருபவர் திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவார். அவருடைய பெரும் முயற்சியால் இன்றைக்கு இந்திய அளவில் உள்ள பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளார்.
எனவே திமுகவை பலவீனப்படுத்தி விடலாம் என்று கனவு கண்டு அந்த கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் அமைச்சர் எ.வ.வேலு இல்லம் மற்றும் நிறுவனங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகள் மூலம் அமைச்சர் எ.வ.வேலுவை பணிய வைக்கலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகி விடும். பாஜகவின் இந்த தகுடுதத்தம் வேலைகள் மூலம் அமைச்சர் எ.வ.வேலுவையோ, திமுகவையோ ஒடுக்கி விட முடியாது.
அவர்கள் எமர்ஜென்சி என்ற நெருப்பிலிருந்து வெளியே வந்த பீனிக்ஸ் பறவைகள். ஆளுநர் ரவி, அண்ணாமலை, அரசு எந்திரங்கள் என்று வரிசை கட்டி திமுகவை வீழ்த்திட நாள்தோறும் முயற்சித்து வருகிறார்கள். அவை அனைத்தும் திமுகவிற்கு பலம் சேர்ப்பவையாகவே அமைந்து வருகிறது. மோடி-அமித்ஷா கூட்டு சதியான அற்ப அரசியல் ஆதாயத்திற்காக அரசின் நிறுவனங்களை பயன்படுத்துவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.