புதுடெல்லி: வீடு ஒதுக்கீடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம், மீண்டும் அந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். கடந்த 2006-11ம் ஆண்டுகளில் சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020ம் ஆண்டு பதிவு செய்த வழக்கை ரத்து ெசய்யக்கோரி ஜாபர் சேட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து கடந்த 21ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஜாபர் சேட் மீதான வழக்கில் சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்து விசாரணையை வரும் 3ம் தேதிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு தள்ளிவைத்திருந்தது.
இதை எதிர்த்து ஜாபர் சேட் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், “சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை தன் மீது தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 21ம் தேதி ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதில், ஜாபர் சேட் மீதான ஊழல் வழக்கு அதாவது மூல வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இதே வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக கடந்த 23ம் தேதி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு தெரிவித்து வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு பட்டியலிட வேண்டும் என்று நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் வெளிப்படையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் இணைய தளத்தில் அந்த உத்தரவு பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கை வேறு காரணங்களை கூறி மீண்டும் விசாரிக்க முடியாது. இதன் மூலம் இந்த வழக்கை விசாரித்த அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கை தங்கள் அமர்வுக்கே பட்டியலிட வேண்டும் என்று கூறியிருப்பதால் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்ய வேண்டும். நியாயமான, நேர்மையான தீர்ப்புக்காக வேறு அமர்வுக்கு மாற்றுமாறு நீதிமன்ற பணிகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் பெற்றுள்ள பொறுப்பு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். உயர் நீதிமன்றம் எனது வழக்கை ரத்து செய்த உத்தரவை செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் பெரிய அளவில் பிரசுரம் செய்துள்ள நிலையில், உயர் நீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த இந்த உத்தரவை எப்படி அழிக்க முடியும்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஏதோ ஒரு மொட்டை புகாரின் அடிப்படையில் இணைய தள பதிவை நீக்கிவிட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதை ஏற்க முடியாது. ஒரு வழக்கின் இறுதி முடிவை எட்டிய நிலையில் அந்த வழக்கை விசாரிக்க முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்\\” என்று மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.