சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜா நேற்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீலகிரி எம்.பி. ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5 கோடியே 53 லட்சம் சொத்துகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி கடந்த 2015ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு ஆ.ராசா, நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனிடையே, அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆ.ராசா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.