டெல்லி : பண மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து சொத்தை பறிமுதல் செய்வதற்கான அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்திய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டுமா என்று ஆராய உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு சில அம்சங்களின் அடிப்படையில் அளித்த இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வது, தேடுதல் மற்றும் சொத்து பறிமுதல் செய்வதில் அமலாக்கத்துறையின் அதிகாரங்களை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியது.
இதற்கு எதிரான மனுக்கள் நீதிபதி கள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, திரிவேதி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் ஒருவர் குற்றவாளியா, சாட்சியா என்ற தெரியாத நிலை உள்ளதாக கூறினார். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா, யாராவது ஒருவர் நீதிமன்றத்தை அணுகி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார் என்பதற்காக தேவையின்றி மறு ஆய்வு செய்யக் கூடாது என்று ஆட்சேபம் எழுப்பினார்.
கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மெஹ்தா தெரிவித்தார். அப்போது பண மோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான சில சிக்கல்களை ஏற்கனவே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு எடுத்துரைத்துள்ளதால் பணப்பரிமாற்றம் வரையறுக்கப்பட்டுவிட்டதாக சிறப்பு அமர்வு கூறியது. எனினும் மறுபரிசீலனை தேவையா என்பது தான் இப்போதைய பிரச்சனை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட பின் தேவையில்லை என அமர்வு கருதினால் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படாது என்று அவர்கள் கூறினர். மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.