ஜெய்ப்பூர்: அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அடுத்த மாதம் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் 6 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரதில் கோவிந்த் சிங் தோதசராவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. அதுதொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் கொடானியா வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், ரூ 12 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. வாக்குப்பதிவு நடைபெற ஒரு மாதமே உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசோக் கெலாட் மகனுக்கு சம்மன்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட். இவர் மொரிஷியஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘விஷ்னார் ஹோல்டிங்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோதமாக நிதியை பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நாளை ஆஜராகுமாறு வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சம்மன் அனுப்பி உள்ளனர்.