சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஊழியர்களை பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக நேற்று இரவு வரை அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர் தெளிவாக பதில் அளித்தார். அதை அமலாக்கத்துறை பெண் அதிகாரி ஒருவர் வாக்குமூலமாக பதிவு செய்தார்.
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு விசாரணைக்காக தங்கள் காவலில் எடுத்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். நேற்று காலை மீண்டும் டாக்டர்கள் பரிசோதனை முடிந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக காலை முதல் இரவு வரை விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது, பெண் அமலாக்கத்துறை அதிகாரி தலைமையில் 2 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் ஏற்கனவே வைத்திருந்த பட்டியலில் இருந்த கேள்விகளை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும், விளக்கமாகவும் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அதை பெண் அதிகாரி தலைமையிலான குழு வாக்குமூலமாக பதிவு செய்தது. இதற்கிடையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் நேற்று காலை அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார்.
செந்தில்பாலாஜியை சந்திக்க வேண்டும் என்றார். ஆனால் அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பி விட்டார். இதனால் சிறிது நேரம் சாஸ்திரிபவன் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமைச்சரை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர் என்று அமலாக்க துறை மீது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.