Sunday, February 25, 2024
Home » பழிவாங்கும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்படும் அமலாக்கத்துறை: லஞ்சப்புகாரில் கைதான அங்கித் திவாரி வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம்

பழிவாங்கும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்படும் அமலாக்கத்துறை: லஞ்சப்புகாரில் கைதான அங்கித் திவாரி வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம்

by Ranjith

புதுடெல்லி: அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பழிவாங்கும் வகையில் அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதா? என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து,ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். ஒரு அமலாக்கத்துறை அதிகாரி, மாநில லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுக்களை, திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவை தள்ளுபடி செய்தது. அங்கித் திவாரிக்கு வரும் பிப்ரவரி 7ம் தேதி வரையில் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை தரப்பில் அங்கித் திவாரிக்கு எதிராக புதிய வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘‘அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும். குறிப்பாக அவர் லஞ்சம் வாங்கியது உண்மை தானா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை மனுவை விசாரித்த திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது. மேற்கண்ட விவகாரத்தில் அமலாகத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அங்கித் திவாரியை எங்களது துறை ரீதியிலான கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் வழக்கை சிபி.ஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று அங்கித் திவாரி வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்டுள்ள ரிட் வழக்கு விசாரணையின் போது எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேற்கண்ட இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘நாங்கள் ஒன்றும் அங்கித் திவாரியை காப்பாற்ற விரும்பவில்லை. கைது செய்ய தான் கேட்கிறோம்.

மேலும் அங்கித் திவாரி தொடர்பான எப்.ஐ.ஆரை எங்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக அங்கித் திவாரி தொடர்பான வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவை அனைத்துக்கும் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கே.வி.விஸ்வநாதன், இந்த விவகாரத்தில் பழிவாங்கும் வகையில் அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் கையில் எடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதுபோன்று ஏன் செயல்பட வேண்டும் என கண்டனம் தெரிவித்தார். அமலாக்கத்துறை வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கபில் சிபல், அமீத் ஆனந்த் திவாரி மற்றும் குமணன் ஆகியோர், ‘‘அமலாக்கத்துறை தமிழ்நாட்டை மட்டும் குறி வைத்து செயல்படுகிறது.

குறிப்பாக சிபி.ஐ மற்றும் அமலாக்கத்துறை இரு விசாரணை அமைப்புகளும் பாரபட்சமாக செயல்படுகிறது. இவர்கள் நியாயமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் தான் விசாரணைகளும் சரியாக நடக்கும். குறிப்பாக அசாம் மாநில முதல்வர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை ஏன் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. அதேபோன்று அரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பலர் மீது வழக்குகள் உள்ளது. ஆனால் அதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என காரசாரமாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “நாங்கள் சரியான கோணத்தில் தான் விசாரணை நடத்துகிறோம்’’ என தெரிவித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள், ‘‘யார் நீங்களா, பாஜ இல்லாத அனைத்து மாநிலங்களுக்கும் எதிராக மட்டும் தான் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் என்பது வெளிப்படைத்தன்மையாக தான் நடந்து வருகிறது. ஆனால் அமலாக்கத்துறை அந்த விவகாரத்தில் என்ன செய்தது, பத்து மாவட்ட ஆட்சியர்கள் மீது வழக்கு பதிவு செய்தது மட்டுமில்லாமல், சோதனைகளையும் நடத்தியது. ஆனால் அதில் எதற்கும் போதிய ஆதாரங்கள் கிடையாது என்பதால் தான் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது’’ என தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் கேட்டது போன்று சிபி.ஐ விசாரணைக்கு உடனடியாக வழக்கை மாற்ற முடியாது. வழக்கு குறித்து முதலில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதிலளிக்கட்டும். ஏனெனில் இதுபோன்ற வழக்குகளில் நாங்கள் வெளிப்படைத் தன்மை மற்றும் சுமூகமான நடைமுறை ஆகியவற்றை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக இதுபோன்ற விவகாரத்தில் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க கூடிய ஒரு சட்ட நெறிமுறையை ஏன் ஒன்றிய அரசு பரிந்துரைக்க கூடாது? என கேள்வியெழுப்பினர். ஒருவேளை தமிழ்நாடு அரசு அதுபோன்று கொண்டு வரும் பட்சத்தில் மற்ற மாநிலங்களும் அதனை பின்பற்றும் விதமாக அமையும்.

அதுகுறித்தும் ஒன்றிய அரசு ஆய்வு செய்ய வேண்டும்’’ என தெரிவித்த நீதிபதிகள், ‘‘அங்கித் திவாரி தொடர்பான விவகாரத்தில் எப்.ஐ.ஆர் உட்பட வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வாரத்தில் தங்களது அறிக்கையை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் வரையில், அங்கித் திவாரி தொடர்பான வழக்கில் மேற்கொண்டு விசாரணையோ அல்லது குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்ய வேண்டாம்என தெரிவித்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

You may also like

Leave a Comment

20 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi