டெல்லி: வரையறுக்கப்பட்ட விதிகளின் படி செயல்படுவதில் அமலாக்கத்துறை தோல்வி அடைந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்துக்காக மட்டும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தன வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹரியானா ரியல் எஸ்டேட் குழும இயக்குனர்கள் பன்சால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
அமலாக்கத்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, பி.வி.சஞ்சய் குமார் அமர்வு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான காரணங்கள் எழுத்துபூர்வமாக நிச்சயம் தெரிவித்தாக வேண்டும் என்று கூறியுள்ளது. எழுத்துப்பூர்வ நகலை அவர்களுக்கு வழங்காமல் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டதை கண்டித்த உச்சநீதிமன்றம் பஷன் பன்சால், பங்கஸ் பன்சால் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தவறியது பிரிவு 19-ன் கீழ் கைது செய்யப்படுவதற்கு போதுமான கரணம் அல்ல என்று கூறிய நீதிபதிகள் ஒருவரின் ஒத்துழையாமை மட்டுமே அவரின் குற்றத்திற்கு பொறுப்பாக்க போதுமானதாக இருக்காது என குறிப்பிட்டுள்ளன. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் மட்டும் ஒருவரை கைது செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அமலாக்கத்துறை எதிர்பார்ப்பது சரியல்ல என்றும் நீதிபதிகள் கருத்து கூறியிருக்கின்றனர்.
பண மோசடியை தடுப்பதில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் நியமானதாகவும், கடுமையானதாகவே இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் வகையில் இருக்க கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி செயல்படுவதில் அமலாக்கத்துறை தோல்வி அடைந்து விட்டது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றம் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை உறுதிப்படுத்த காவலில் வைக்கும் உத்தரவு மட்டும் போதாது என்று தெரிவித்துள்ளது.