டெல்லி: அமலாக்கத்துறை சோதனையை கண்டு அச்சப்படும் கட்சி அல்ல திமுக என்று அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செம்மண் குவாரி தொடர்பாக 2012ல் தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுக்கு பிறகு தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அமலாக்கத்துறை சோதனையை கண்டு அச்சப்படும் கட்சி அல்ல திமுக. எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவை ஆதரிப்பதாக கூறப்படும் கட்சிகளின் பெயர்களை வெளியிட தயாரா? அவை பதிவு கூட செய்யப்படாத கட்சிகள். எங்களோடு உள்ள மக்கள் தொடர்ந்து எங்களோடு தான் இருக்கிறார்கள்.
கட்சிகளை பிளவுபடுத்தி பாஜக பலத்தை காட்ட முயற்சி
மோடியே மிக பலம் பொருந்தியவர் என்றால் 30 கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுப்பது ஏன் என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அச்சமடைந்துள்ளதால் தான் பல கட்சிகளை பிளவுபடுத்தி பலத்தை காட்ட முயற்சிக்கிறதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை கண்டு பாஜக அச்சம் அடைந்துள்ளது.