சென்னை: கடந்த 2006-2011ம் ஆண்டில்உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. பின்னர், இதில் கிடைத்த தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் உள்ளதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று வாதிட்டார். பொன்முடி தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.