திறமையின்றி செயல்படுவது, கவனமின்மை, போதிய அக்கறை இல்லாமை இவையெல்லாம் தனி நபரை மட்டும் பாதிப்பது அல்ல, எல்லோரையும் பாதிப்படையச் செய்யும். ஒரு சின்ன குறைபாடு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். எனவே உங்கள் வேலையில் எப்போதும் அக்கறையுடன் செயல்படுங்கள். அத்துடன் உங்கள் பணியில் முழு அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். அது உங்கள் பணியின் தரத்தை மட்டுமல்ல உங்களின் தரத்தையும் மேம்படுத்தும்.நீங்கள் செய்யும் வேலை நேர்த்தியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்ற வேண்டும். உங்களுடைய சிறப்பியல்பை முத்திரை பதிப்பதாக இருக்க வேண்டும். நிறைய பேர் ஏதாவது செய்துவிட துடிக்கிறார்களே தவிர, தங்கள் வேலையில் அர்ப்பணிப்போடு ஈடுபடுவதில்லை. போதிய பயிற்சி இல்லாமல், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தாமல் செய்யக்கூடிய பணி என்றுமே வெற்றியைத் தராது.
நிறைய பேர் படிப்பறிவையும், தொழிற் பயிற்சியையும் பெற்றிருந்தாலும் தங்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால் சாதாரண நிலையைத் தான் அடைய முடிகிறது.ஆனால் உங்கள் பணியில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டுமென்றால் முதலில் உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.
லண்டனில் நடந்த சம்பவம் இது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகில் கசிவு ஏற்பட்டு மூழ்கும் அபாயத்தில் இருந்தது. அதை பழுது பார்க்கும் போது படகில் கசிவு ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்தார்கள். 13 ஆண்டுகளுக்கு முன்பு படகிலேயே விடப்பட்டிருந்த ஒரு சம்மட்டி, அப்படியும், இப்படியும் நகர்ந்து படகின் அடித்தட்டில் விழுந்திருக்கிறது, அங்குள்ள பலகை இணைப்பில் மோதிமோதி விரிசல் ஏற்படுத்திவிட்டது. 13 ஆண்டு கால தவறால் ஒரு படகில் கசிவு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.அதேபோலத் தான் தரக்குறைவான உபகரணம், எத்தனையோ மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, கவனக்குறைவு அல்லது நேர்மையற்ற வேலையால் விளையும் விபத்துக்கள் அதிகம். நீங்கள் எந்த வேலையை மேற்கொண்டாலும் அதை சரியாக செய்யுங்கள், உங்கள் துறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, அதில் முழுமையாக உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
மற்றவர்கள் அரைகுறையாய் விட்டுச்சென்ற வேலைகளைத்தான் எடிசனும், கிரகாம்பெல்லும் முழுமைப்படுத்தி உலகிற்கு வழங்கி, உலகப்புகழ்பெற்ற அறிஞர்களாக உருவானார்கள்.இவர்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியதுதான். இவர்களைப் போலவே எத்தனையோ மனிதர்கள் திறமையின் மூலமாக சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.சுந்தர்பிச்சை, சத்யா, நாதெள்ளா, பராக் அகர்வால், தாமஸ் குரியன் போன்ற பலர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று தங்கள் திறமையின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர்கள். இந்த வரிசையில் ஒரு பெண்மணி சத்தம் இல்லாமல் சாதித்துள்ளார். இவரின் சாதனை அதிகமாக தலைப்புச் செய்திகளில் இடம்பெறவில்லை. ஆனால் திறமையை மூலதனமாக வைத்து சாதித்த சாதனைப் பெண் தான் யாமினி ரங்கன். ஆளுமை மிக்க பெண்களின் பட்டியலில் யாமினி ரங்கனும் இப்போது இடம் பெற்றுள்ளார்.
யாமினி இந்தியாவின் ஒரு சிறிய நகரத்திலிருந்து அமெரிக்கா சென்று அங்கு உயர்ந்த பதவியை அடைந்துள்ளார். யாமினி ரங்கன் தனது கல்லூரிப் படிப்பை கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பாக எம்.பி.ஏ படித்தார்.அதன் பிறகு தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய உயர் பதவியை அடைய வேண்டும் என்ற இலக்கை தீர்மானித்தார்.
தன்னுடைய இலக்கைக் கனவாக மாற்றிக்கொண்டார், இளம்வயதில் தன்னுடைய கனவுகளை நிஜமாக்க இந்தியாவின் சிறிய நகரத்திலிருந்து அமெரிக்காவிற்கு சென்றார். ஆரம்பத்தில் இவருடைய பயணம் வெற்றிப் பயணமாக அமையவில்லை. பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டார். யாமினி ரங்கனின் வாழ்க்கை ஆரம்ப கட்டத்தில் போராட்டம் மிக்கதாக அமைந்தது. ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி வேலை தேடலாம் என்று முயற்சித்த போது யாமினியிடம் இருந்தது வெறும் 150 டாலர் மட்டுமே. அத்தகைய சூழ்நிலையில் அவருக்கு சரியான வேலையும் கிடைக்கவில்லை.
ஆனால் யாமினி தனக்கு என்ன வேலை கிடைக்கிறதோ, அந்த வேலையை பார்க்க முடிவு செய்தார்.அட்லாண்டாவில் ஒரு கால்பந்து மைதானத்தில் உள்ள உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை மட்டுமே கிடைத்தது. யாமினி மனம் தளரவில்லை, கிடைத்த வேலை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று பணியில் சேர முடிவுசெய்தார். பெற்றோரிடம் பணம் கேட்காமல் சொந்தக்காலில் நிற்க முடிவு செய்து கிடைத்த வேலையை ஆர்வமாகச் செய்தார்.
அதன் பிறகு தனக்குப் பிடித்த துறையான தொழில்நுட்பத் துறையில் வேலை தேட முயற்சித்தார். அதன் பலனால் ஒரு சில நிறுவனங்களில் வேலையும் கிடைத்தது, அந்த நிறுவனங்களில் தனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டார்.
SAP, Lucent, Workday மற்றும் Dropbox போன்ற பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றினார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு ஹப்ஸ்பாட் என்ற நிறுவனத்தின் தலைமை வாடிக்கையாளர் நிர்வாகியாக பணியில் சேர்ந்தார்.பணியில் சேர்ந்த ஒரு வருட காலத்துக்குள் அவருடைய முழு அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் பணியாற்றி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய திறமையை பார்த்து வியந்த ஹப்ஸ் பாட்டின் நிறுவனர், யாமினி ரங்கனை சி.இ.ஓ வாக தலைமைச் செயல் அதிகாரியாக அறிவித்தார். தகவல்தொழில்நுட்பத் துறையில் மரியாதைக்குரிய உயர்ந்த பதவியான தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்த யாமினி ரங்கன் தன்னுடைய கனவை நிஜமாக்கி சாதித்துள்ளார்.
யாமினி தற்போது 25.66 பில்லியன் டாலர் நிகர மதிப்பு அதாவது 2 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்து பெருமை சேர்த்திருக்கிறார்.வெறும் 21 வயதில் அமெரிக்காவிற்கு சென்று கிடைத்த வேலையெல்லாம் பார்த்து, தன்னுடைய விருப்பமான துறையான தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைந்து அனுபவங்களை வளர்த்துக்கொண்டு முழு அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் பணியாற்றி திறமையை முழுமையாக வெளிப்படுத்தி சி.இ.ஓ வாக உயர்ந்த யாமினி ரங்கனின் வாழ்க்கை இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன் உதாரணமாகும். திறமையை வளர்த்துக்கொள், அதைச் சரியாக கூர்மைப்படுத்திக் கொள், அதன் மூலமாக உயரத்துக்கு வருவாய், சிகரத்தில் அமர்வாய் என்பதுதான் இவரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடமாகும்.