கோவை: அதிமுக நிர்வாகியும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக்குமார் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மாணவர்களின் பெற்றோர்களிடம் ரூ.50 கோடி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. அவர் மீது கோவையில் மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொடக்குறிச்சி பாஜக எல்எல்ஏ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகனும், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குனருமாக இருந்தவர் ஆற்றல் அசோக்குமார். 2006ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குனராக இருந்த ஆற்றல் அசோக்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில், ஆற்றல் அசோக்குமார் தனது சொத்து மதிப்பு ரூ.683 கோடி என கணக்கு காட்டி இருந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 24ம் தேதி ஆற்றல் அசோக்குமார், பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்து அதிகாரங்களும் திரும்ப பெறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன், மற்றும் சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், கோடை விடுமுறையில் 2025-26ம் கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு, அப்பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு இ-மெயில் மூலம் தகவல் சென்றது. அதில் உள்ள லிங்கில் சென்று கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி சுமார் 3000 பெற்றோர், ரூ.40 கோடியை அந்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இந்த பணம் ஏற்கனவே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனராக இருந்த அசோக்குமார் நிறுவன வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது.
‘இந்தியன் பப்ளிக் ஸ்கூல் எக்ஸலன்ஸ்’ என்ற அந்த கணக்கை உருவாக்கி அதன் லிங்க்-ஐ பெற்றோருக்கு அனுப்பி இந்த மோசடி நடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சில பெற்றோர் நேரடியாக நிர்வாக குழுவிடம் கேட்ட போது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மார்ச் 24ம் தேதியே நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆற்றல் அசோக்குமார் நீக்கப்பட்ட நிலையில் இந்த பணம் அவருக்கு சென்றுள்ளது. இதையடுத்து பள்ளியின் புதிய நிர்வாக குழுவை சேர்ந்த சிவசங்கரன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ஆற்றல் அசோக்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த கில்பர்ட் ஜேம்ஸ் லூர்துராஜ், கார்த்திகேயன் துரைசாமி, சொக்கலிங்கம், விஜயகுமார், பிரபாகரன் ஆகிய 6 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், சதித்திட்டம், உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி பேருந்துகள் வாங்க பள்ளி இயக்குநர்கள் குழு அனுமதியின்றி போலியான ஆவணங்களை காட்டி அசோக்குமார் ரூ.9.69 கோடி கடன் பெற்றுள்ளார். பேருந்தின் அசல் விலை சுமார் ரூ.26 லட்சமாக இருக்கும் நிலையில், அதனை ரூ.32 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி லாபம் பெறும் நோக்கத்தில் செயல்பட்டதும் கண்டறியப்பட்டது. நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது போல போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட போலீசார் ஆற்றல் அசோக்குமார் மீது 336(3), 340(2), 316 (2), ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பள்ளியில் இருந்த அனைத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் அசோக்குமார் எடுத்துச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் சோனாலி கீத் (56). இவர் கோவை தேவம்பாளையத்தில் உள்ள இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் தலைமை கல்வி அதிகாரியாக பணியாற்றினார். இவர் கடந்த 4-12-2024ல் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நிர்வாக இயக்குனராக உள்ள ஆற்றல் அசோக்குமார் தன்னை வேலையை ராஜினாமா செய்ய சொல்லியும், பள்ளி குடியிருப்பை காலி செய்யுமாறும் மிரட்டி வருகிறார். தனக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், கோவில்பாளையம் போலீசார் ஆற்றல் அசோக்குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.