தெஹ்ரான்: இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் பதற்றம் காரணமாக ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது.
கமேனி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி குற்றச்சாட்டியுள்ளார். எதிரி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர் என்று கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் இராவானி கூறுகையில், “அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். எந்த நேரத்தில், எத்தகைய தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஈரான் ராணுவம் முடிவு செய்யும்.” என்று கூறியுள்ளார். அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில் கமேனி இந்த எச்சரிக்கப் பதிவை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரித்தால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். எனவே ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்க ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் அணு ஆயுதங்களை தளங்கள் 3ம் அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் உடனே அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அமெரிக்க தாக்குதலை ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்துள்ளன. ரஷ்யா, துருக்கி, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தாக்குதலைக் கண்டித்துள்ளது.