சென்னை: அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வுக்கான தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலை பணியில் உள்ள செயல் அலுவலர் (கிரேடு 4) பதவியில் காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கு, 11.9.2022 அன்று எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் 43,410 பேர் கலந்துகொண்டனர். இத்தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை அடிப்படையில் 40,909 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1ஏ பணிகளில் அடங்கிய தமிழ்நாடு வன பணியில் உள்ள உதவி வனப்பாதுகாவலர் பணியில் காலியாக உள்ள 9 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 6,521 பேர் கலந்து கொண்டனர். இதில் முதன்மை தேர்விற்கு 93 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.