மலையாள திரையுலகில் திரைமறைவில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த பிறகு தோண்ட தோண்ட பூதம் கிளம்புகிறது. பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். சில நடிகைகள் குறிப்பிட்ட முன்னணி நடிகர்களின் பெயரை சொல்லி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் திரையுலக பாலியல் புகார் குறித்த விசாரணையை நடத்த கேரள உயர்நீதிமன்றம் பெண் நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் அழகு, ஸ்டைல், சுதந்திரம், வசதி, புகழ், பணம் இவற்றை பார்த்து கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் திரையுலகில் தானும் சாதிக்க வேண்டும் என்று ஆசை கொள்வதில் தவறில்லை. ஆனால் திரைத்துறையில் நுழைய முறையான வழியை அறிந்து கொண்டு முயற்சியை தொடர வேண்டும். திரைத்துறையில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக சிலர் காட்டிக்கொண்டு வாய்ப்பு தேடி வரும் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றுகின்றனர். இதை வெளியே சொல்ல முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் மூடி மறைத்துவிடுகின்றனர். மேலும் சட்டரீதியாக போராட அவர்களிடம் போதிய பண பலமோ, செல்வாக்கோ இருப்பதில்லை.
இப்படி பலவீனமானவர்களை தான் தங்கள் விருப்பத்துக்கு சிலர் இரையாக்கி கொள்கின்றனர். மலையாள திரையுலகை அடுத்து தெலுங்கு திரையுலகம், கன்னட திரையுலகிலும் பாலியல் சர்ச்சைகள் எழுந்துள்ளன. நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ளாவிட்டால் அவர்களுக்கு வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன. இந்த பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் வழக்கு பல ஆண்டுகள் இழுக்கப்படுவதால் நீர்த்து போய்விடும் நிலை இருக்கிறது. குற்றம் நடந்த பிறகு அதை சட்டரீதியாக எதிர்கொள்ளும் பாதுகாப்பை விட குற்றம் நடக்காத அளவுக்கு ஒரு நல்ல சூழலை திரையுலகில் மட்டுமல்ல பெண்கள் பணியாற்றும் அனைத்து துறையிலும் உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
அதன்படி தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை நடத்தி, பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டோர் 5 ஆண்டு சினிமாவில் பணியாற்ற தடை விதித்து அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் வரவேற்க கூடிய ஒன்றாகும். இதற்கிடையில் பிரபல நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறிவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாலியல் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்கு கொண்டுவந்து சமுதாயத்துக்கு ஆரோக்கியமான சினிமா சேவை தொடர வேண்டும்.